காமக் குரங்கு
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே
தேவையில்லை. "டிராக்" கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம்
கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக்
கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான்.
ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின்
போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும்
இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு
ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை!
வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப்
பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள்,
வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் "ஆமாம்" என்றார். வேறு
வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள்
பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர்.
மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள்
அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை
அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம்
முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய
குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா?
கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள்
அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க,
பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள்
பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது.
பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும்
மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே
காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.