Pages

Subscribe:

Tuesday, October 30, 2012

இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?



            நவீன கால மக்களிடையே இராமாயணத்தைப் பற்றிப் பேசும்போது எழும் பொதுவான கேள்வி: வாலிக்கும் இராமருக்கும் எந்தப் பகையும் இல்லாத பட்சத்தில், இராமர் வாலியை வதம் செய்தது ஏன்? அதுவும் மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து வதம் செய்ய காரணம் என்ன? இவற்றை இங்கு சற்று அலசிப் பார்ப்போம்.

            இக்கேள்விகளை எழுப்புவோரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. வேத வரலாற்றை நம்புவோர்
2. வேத வரலாற்றை நம்பாதோர்.

ஸ்ரீ இராமர் பாவமற்றவர், கறையற்றவர், குற்றமற்றவர் என்பதை வேத வரலாற்றை நம்புவோர் அறிவர்; இருப்பினும், போதிய சாஸ்திர ஞானம் இல்லாத காரணத்தினால், அவர்களால் இதுபோன்ற கேள்விகளுக்கு திருப்தியான பதிலை வழங்க முடிவதில்லை. இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையற்ற மக்கள், இராமர் நல்லவர் அல்ல" என்னும் மூடத்தனமான முடிவிற்கு வருகின்றனர்.
 கடவுள்" என்பதன் அடிப்படைப் பொருளை ஆராய்ந்தோ மெனில், அவர் பூரணமானவர், அனைத்து சக்திகளும் கொண்டவர், அனைவரது நலனையும் விரும்புபவர், என்றும் நல்லவர் போன்ற தகவல்களைப் பெறலாம். அவர் என்றும் நல்லவர் என்னும் பட்சத்தில், இராமர் நல்லவர் அல்ல" என்னும் முடிவு நிச்சயம் முட்டாள்தனமானதே. இராமரின் மீதான இக்குற்றச்சாட்டிற்கு எவ்வாறு தீர்வு காண்பது?


இராமாயணம் படிப்போம்
                       நமக்கு நாமே கேட்க வேண்டிய முதல் கேள்வி: இராமர் வாலியை வதம் செய்த தகவலை நாம் எங்கிருந்து பெறுகிறோம்? நிச்சயமாக, இராமாயணத்தில் இருந்தே. சரி, நாம் உண்மையில் இராமாயணத்தை படித்ததுண்டா? இல்லை" என்பதே பெரும்பாலான மக்களின் பதில். கேள்வியெழுப்புவோரில் பெரும்பாலானோர் இராமாயணத்தைப் படித்ததே இல்லை; ஆனால் கருத்து கூறி தீர்ப்பு வழங்குகின்றனர்--இது நியாயமா? கர்வமுள்ள மூடர்கள் மட்டுமே இவ்வாறு செய்வர்.
தொலைக்காட்சியில் பார்த்தோம்," என்று சிலர் வாதம் செய்வர். இராமாயணத்தை வியாபார நோக்கில் தயாரிப்பவர்கள், கதையை மட்டும் காட்டிவிட்டு அதிலுள்ள கருத்துகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களது அக்கறை பணத்தில் மட்டுமே, பணத்திற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். வேத கால வரலாற்றையும் உண்மைகளையும் திரித்து தங்களின் நோக்கத்திற்குப் பொருந்தும் வகையில், அவர்கள் தொலைக்காட்சியில் வெளியிடுவர். எனவே, தொலைக்காட்சிகளில் வரும் இராமாயணத்தை நம்பி விவாதம் செய்வது கூடாது.

             மூல இராமாயணமான வால்மீகி இராமாயணத்தை படிப்பதன் மூலமாக திருப்திகரமான பதிலைப் பெற முடியும். வால்மீகி இராமாயணத்தைப் படித்தவர்கள் வாலியை இராமர் ஏன் வதம் செய்தார்" என்ற கேள்வியை ஒருபோதும் கேட்கமாட்டார்கள்; ஏனெனில், இராமரின் செயலுக்கான காரணம் அங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீ இராமரே பரம்பொருள், பரம புருஷ பகவான் என்பதும் அங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.

முழுமையாக ஏற்க வேண்டும்
        சிலரோ, இராமர் வாலியை வதம் செய்தது அநீதி! இஃது எல்லாருக்கும் தெரியும், இதற்காக இராமாயணம் படிக்க வேண்டிய அவசியமில்லை," என்று வாதம் செய்கிறார்கள். ஒரு விதத்தில் பார்த்தால், இராமரை எதிர்க்கும் இவர்கள், இராமர் என்ற ஒருவர் வாழ்ந்தார் என்பதையும் அவர் வாலியைக் கொன்றார் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். ஒருவேளை இராமர் வாழ்ந்ததை அவர்கள் நம்பாவிடில், அவர்களது வாதங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இல்லாத ஒன்றைப் பற்றி வாதிடுவது முறையா? பிரச்சனை என்னவெனில், வாதிடுவோர் முழு இராமாயணத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை; மாறாக, அவர்களின் குற்றச்சாட்டுகளை மேலோட்டமாக ஆதரிக்கும் பகுதிகளை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

    நியாய சாஸ்திரங்களிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் பின்வரும் கதையைக் கூறுவதுண்டு: முட்டாள் ஒருவனால் வளர்க்கப்பட்ட கோழி ஒன்று தினமும் தங்க முட்டையிட்டு வந்தது. இக்கோழியினால் எனக்கு நல்ல இலாபமே, ஆனால் இதற்கு இரை போடுவதற்கு செலவாகிறதே. இதன் முன்பகுதியை (தலையை) வெட்டிவிட்டால், எனக்கு செலவு இருக்காது, பின்பகுதியிலிருந்து செலவின்றி தங்க முட்டையைப் பெறலாம்," என்று எண்ணிய அவன் கோழியின் தலையை வெட்டினான். விளைவு: அனைத்தையும் இழந்தான். இது, அர்த குகுட்டி நியாய, அதாவது அரைக் கோழிக் கொள்கை" எனப்படுகிறது.
சாஸ்திரங்களின் ஒரு பகுதியை மட்டும் ஏற்று மற்றொரு பகுதியை நிராகரிக்கக் கூடாது என்ற போதனையை இக்கதையிலிருந்து நாம் பெறுகிறோம். முழு இராமாயணத்தையும் ஏற்று, அதனை முறையாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தத்தமது சொந்த கருத்துகளுக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை நிராகரிப்பது சரியல்ல. இராமர் வாலியை வதம் செய்தார் என்னும் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுவோர், வாலி ஸ்ரீ இராமரை பரம புருஷ பகவானாக ஏற்று புகழும் பகுதியை விட்டு விடுகின்றனர்.

வாலியை ஸ்ரீ இராமர் வதம் செய்தல்
     வாலிக்கும் இராமருக்கும் இடையில் நடந்தது என்ன என்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்த அல்லது தெரிவிக்க, இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள சம்பவத்தின் சுருக்கத்தைச் சற்று காண்போம். கிஷ்கிந்தையின் அரசனான வாலிக்கு அவனது இளைய சகோதரனான சுக்ரீவன் சேவை செய்து வந்தான். அவனுக்கு மயவி என்ற அசுரனுடன் ஒரு பெண்ணின் காரணத்தினால் பெரும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மயவி வாலியைப் போருக்கு அழைத்தான், வாலி பெருங்கோபத்துடன் மாளிகையை விட்டு வெளியேற, சுக்ரீவனும் அவனைப் பின்தொடர்ந்தான். வாலியைக் கண்டு அச்சமுற்ற மயவி புதர்கள் நிறைந்த ஆழமான இருண்ட குகைக்குள் நுழைந்தான். அதன் வாயிலைக் காவல் காக்குமாறு சுக்ரீவனுக்கு கட்டளையிட்ட வாலி அசுரனுடன் போரிட குகைக்குள் சென்றான். ஒரு வருடம் கழிந்த பின்னரும் வாலியைப் பற்றிய எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. குகையிலிருந்து இரத்தம் வெளிவருவதையும் பல்வேறு அசுரர்களின் குரலையும் கேட்ட சுக்ரீவன், வாலியின் குரலைக் கேட்க முடியாததால், வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தீர்மானித்து, குகையின் வாயிலை ஒரு பெரும் பாறையினால் மூடினான். சகோதரனுக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்துவிட்டு, சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குத் திரும்பியபோது, அமைச்சர்கள் அவனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்தனர். சுக்ரீவனும் நீதி நெறிப்படி அரசாளத் தொடங்கினான். சில மாதங்கள் கழித்து, எல்லாரும் வியக்கும் வகையில், வாலி அசுரனைக் கொன்றுவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பினான். சுக்ரீவனை அரியணையில் கண்ட வாலி கடுங்கோபம் கொண்டு அமைச்சர்களைக் கைது செய்தான். சுக்ரீவனோ தனது சகோதரனுடன் சண்டையிடாமல் அவன் மீதுள்ள மரியாதையால் பணிவுடன் ராஜ கிரீடத்தை வாலியின் காலடியில் வைத்து வணங்கினான். தான் ஒருபோதும் பலவந்தமாக இராஜ்ஜியத்தைப் பறிக்க எண்ணியதில்லை என்றும், தனது உள்நோக்கமற்ற குற்றத்தினை மன்னித்துவிடுங்கள் என்றும் வேண்டினான். ஆனால் வாலியின் கோபம் சற்றும் தணியவில்லை, குகை வாயிலை மூடிவிட்டு இராஜ்ஜியத்தை கைப்பற்றியதாக சுக்ரீவன்மீது குற்றம் சாட்டினான். சுக்ரீவனுடைய மனைவி, சொத்துக்கள் உட்பட அனைத்தையும் பறித்துவிட்டு, உடுத்தியிருந்த ஒரே உடையுடன் அவனை இராஜ்ஜியத்தை விட்டே வெளியேற்றினான்.

          குற்றமற்ற சுக்ரீவனுக்கு வாலி இழைத்த அநீதியானது சுக்ரீவனை இராமரிடம் சரணடையச் செய்தது. வாலியைக் கொன்று சுக்ரீவனின் மனைவியை மீட்டுத் தருவதாக ஸ்ரீ இராமர் சுக்ரீவனிடம் உறுதியளித்தார், அதற்கு பிரதிபலனாக சீதையைத் தேடுவதில் தானும் வானர சேனைகளும் தங்களுக்கு உதவுவோம் என்று சுக்ரீவன் ஸ்ரீ இராமரிடம் உறுதியளித்தான். அதன் விளைவாக வாலியுடன் சுக்ரீவன் சண்டையிட்டபோது, பகவான் இராமர் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்று வாலியை வதம் செய்து நீதியை நிலைநாட்டினார்.

வாலியின் வாதங்கள்
            வாலியை இராமர் கொன்றது தவறு என்று கருத்துரைப்போர், வாலியே இதுகுறித்து இராமரிடம் கேட்டுள்ளான் என்பதை இராமாயணத்தைப் படித்தால் அறிந்துகொள்ள முடியும். இராமரின் அம்பினால் பாதிக்கப்பட்ட வாலி கடுங்கோபம் கொண்டு பல்வேறு கேள்விகளை ஸ்ரீ இராமரிடம் முன்வைத்தான். அவையனைத்திற்கும் ஒன்றன்பின் ஒன்றாக இராமர் பதிலளித்தார். வாலியின் வாதங்கள் மற்றும் ஸ்ரீ இராமரின் பதில்களில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு காணலாம்.

நான் என்ன தவறு செய்தேன்?
மன்னர் என்பவர் வாய்மை, மன்னிக்கும் தன்மை, மனவுறுதி ஆகிய தன்மைகளுடன் தீயோர்களை தண்டிப்பவராக இருக்க வேண்டும். மன்னரின் நற்குணங்களை நீங்கள் (இராமர்) சீராகப் பெற்றுள்ளீர் என்று நினைத்தேன், குற்றமற்ற என்னை எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்தேன்," என வாலி முறையிட்டான்.

நான் குற்றம் செய்தவன் அல்ல," என்ற வாலியின் வாதத்தினை ஸ்ரீ இராமர் பின்வருமாறு முறியடித்தார்: காமத்தாலும் பேராசையாலும் நீ பாவகரமான செயல்களைச் செய்தாய். குறிப்பாக, உனது இளைய சகோதரனின் (சுக்ரீவனின்) மனைவியான ருமாவைக் கைப்பற்றி அவளை உனது மனைவியாக்கிக் கொண்டாய். இந்த ஒரு பாவச் செயல் போதும், உன்னை நான் தண்டிப்பதற்கு. மகள், மருமகள், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோருடன் உறவு வைப்பவர்களுக்கு மரணமே தகுந்த தண்டனை. ஓர் அரசன் பாவம் செய்தவனைக் கொல்லவில்லையெனில் அந்த பாவம் அரசனுக்கே வந்து சேரும்." உமக்கு என்ன அதிகாரம் உண்டு?

நான் தனிப்பட்ட முறையில் உமக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. உம்முடைய நாட்டிலோ நகரத்திலோ எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் என்னைக் கொல்ல உமக்கு என்ன அதிகாரம் உண்டு?" என்ற வாலியின் கேள்விக்கு ஸ்ரீ இராமர் பின்வரும் பதிலை வழங்கினார்: மலைகள், காடுகள், நதிகள் உட்பட இந்த முழு பூமியும் அதிலுள்ள அனைத்தும் இக்ஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்ஷ்வாகு வம்ச அரசர்களுக்கு எல்லா மனிதர்களையும் விலங்குகளையும் தண்டிப்பதற்கான முழு அதிகாரம் உள்ளது. மன்னரான பரதரின் கட்டளைப்படி நீதியிலிருந்து விலகியோரை தண்டிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு."

நான் ஒரு சாதாரண வானரம்
காடுகளில் வாழும் மிருகங்களான நாங்கள் பழங்களையும் கிழங்குகளையும் உண்டு வாழ்பவர்கள்," என்று கூறிய வாலி, குரங்கான தன்னை சகோதரனின் மனைவியுடன் கொண்ட உறவிற்காக தண்டிக்கக் கூடாது என்று வாதிட்டான். குரங்குகளைக் கொல்வது எதற்கும் பயனற்றது, குரங்கின் தோலை உடுத்த முடியாது, குரங்கின் மயிரும் எலும்புகளும் புறக்கணிக்கப்படுகின்றன, குரங்கின் மாமிசத்தைக்கூட உண்ண முடியாது--அப்படியிருக்கும் பட்சத்தில் என்னை ஏன் கொல்ல வேண்டும்?" என்று வாலி மேலும் வினவினான்.

வாலி தன்னை வெறும் குரங்காக அடையாளம் கண்டுகொள்ள நினைத்தான். ஆனால் வாலி சாதாரண குரங்கா என்ற கேள்வியைக் கேட்போம். வேதக் கடமைகளான சந்தியாவந்தனம், சூர்யோபஸ்தானம் போன்றவற்றிற்காக வாலி விரதங்களை அனுஷ்டிப்பதுண்டு. இதை வைத்துப் பார்க்கும்போது வானரங்கள் சாதாரண மிருகங்களைக் காட்டிலும் உயர்ந்தவை என்பதை உணரலாம்.

                 இருப்பினும், வாலியின் வாதத்திற்கு ஸ்ரீ இராமர் பின்வருமாறு பதிலளித்தார்: மக்கள் மிருகங்களைப் பிடிக்கும்போது சில நேரங்களில் நேரடியாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும், சில நேரங்களில் தந்திரமாகவும் செயல்படுவதுண்டு. மேலும், சத்திரியர்கள் வேட்டையாடும்போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால், மறைந்திருந்து, முன்னறிவிப்பின்றி உன்னைத் தாக்கியதில் எந்தக் குற்றமும் இல்லை."

மறைந்திருந்து தாக்கியது ஏன்?
வாலியை இராமர் ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும் என்ற கேள்வியும் மேற்கூறிய விடையில் அடங்கிவிடுகிறது. மிருகங்களை வேட்டையாடும்போது பெரும்பாலும் மறைந்திருந்து தாக்குவதே பழக்கம் என்ற ஸ்ரீ இராமரின் பதிலே போதுமானது.

வேத விதிகளின்படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையினர் (பார்க்க, பகவத் கீதை உண்மையுருவில், 1.36). இவர்களை உடனே கொல்லலாம், அதனால் பாவம் ஏதுமில்லை. வாலி சுக்ரீவனிடத்தில் செய்த அக்கிரமத்திற்காக அவனை தண்டிக்க வந்த காவல் அதிகாரியைப் போன்றவர் ஸ்ரீ இராமர். நான் வருகிறேன், உன்னை தயார்படுத்திக்கொள்" என்று அவர் அறிவிக்க வேண்டுமா என்ன? நிச்சயமாக அவசியம் இல்லை. எனவே, எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வாலியை வதம் செய்ததில் என்ன தவறு?

           வாலியை இன்று நான் நிச்சயம் வதம் செய்வேன்," என்று இராமர் உறுதி பூண்டிருந்தார். ஒருவேளை இராமர் எதிர்தரப்பில் நேருக்கு நேராக நின்றிருந்தால், வாலி என்ன செய்திருப்பான்? (1) பயத்தினால் ஓடி ஒளிந்திருக்கலாம், (2) இராவணனிடம் கூட்டு சேர்ந்திருக்கலாம், (3) சுக்ரீவனைப் போன்று இராமரிடமே தஞ்சமடைந்திருக்கலாம், அல்லது (4) மொத்த வானரப் படைகளையும் கொண்டு இராமருடன் போர் புரிந்திருக்கலாம். இதில் எது நடந்திருந்தாலும் இராமரின் வாக்குறுதி தாமதமாகியிருக்க வாய்ப்பு உண்டு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.

                      ஒருவேளை சுக்ரீவனைப் போன்று இராமரிடம் வாலி தஞ்சமடைந்திருந்தால், சரணடைந்தவனைக் கொல்வது மரபல்ல என்பதால் வாலி கொல்லப்பட்டிருக்க மாட்டான். அப்போதுகூட முழுமுதற் கடவுளான இராமரால் சுக்ரீவனுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை ஏதாவதொரு விதத்தில் நிறைவேற்றியிருக்க முடியும் என்றபோதிலும், அதில் சில சிக்கல் வந்திருக்கும். ஒருவேளை மொத்த வானர சேனைகளையும் கொண்டு இராமருடன் வாலி போரிட்டிருந்தால், வானரங்கள் அனைவரும் மடிந்திருப்பர். வானரங்கள் இராமருக்கு உதவுவதற்காகத் தோன்றிய தேவர்கள், அவர்கள் கொல்லப்படுவதை இராமர் விரும்பவில்லை; அகந்தையால் மதிமயங்கிய வாலியை மட்டும் கொல்வதற்கு அவர் முனைந்தார்.

                               மேலும், யாரேனும் தனக்கு நேராக நின்று போரிட்டால், அவர்களின் சக்தியில் பாதி தனக்கு வந்துவிட வேண்டும் என்று வாலி ஒரு வரம் பெற்றிருந்தான். (இத்தகவல் வால்மீகி இராமாயணத்தில் இல்லை என்றபோதிலும் மற்ற இடங்களில் கூறப்படுவதுண்டு) இருப்பினும், பகவான் ஸ்ரீ இராமர் அனைத்து சக்திகளையும் கொண்டவர், வரம் தரும் தேவர்களுக்கும் அவரே சக்தியளிக்கிறார் என்பதால், வரத்தை மீறி அவரால் சுலபமாக வாலியை வதம் செய்திருக்க முடியும். ஆயினும், தேவர்கள் வாலிக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும் அவர்களின் மதிப்பை குறைத்துவிட வேண்டாம் என்பதற்காகவும், பகவான் இராமர் வாலியை மறைந்திருந்து வதம் செய்தார்.

         இச்சமயத்தில், பிரம்மதேவரிடமிருந்து பல வரங்களை பெற்ற ஹிரண்யகசிபுவை நாம் நினைவு கொள்ளலாம். அவன் பெற்றிருந்த வரங்கள் அவனைப் பல்வேறு சூழ்நிலைகளில் காப்பாற்றியபோதிலும், பகவானோ பிரம்மதேவரின் வரம் பொய்க்காமல் இருக்கும்படி பாதி மனிதனும் பாதி சிங்கமுமான நரசிம்மராகத் தோன்றி ஹிரண்யகசிபுவைக் கொன்றார். அதுபோல, வாலி பெற்ற வரத்தையும் பொய்க்கச் செய்ய இராமர் விரும்பவில்லை.
 
  என்னுடன் கூட்டு சேர்ந்திருக்கலாமே!
வாலியின் வாதங்களில் மற்றொன்று: சுக்ரீவனிடமிருந்து உதவி பெற என்னைக் கொல்ல முனைந்துள்ளீர்கள். என்னை முதலில் அணுகியிருந்தால், உமது மனைவியைக் கடத்திச் சென்ற அந்த இராவணனை நான் ஒரே நாளில் இங்கு கொண்டு வந்திருப்பேன். அதுவும் அவனைக் கொல்லாமல், கயிற்றால் கட்டி தங்களிடம் கொண்டு வந்திருப்பேன். சீதையை தங்களுக்கு அர்ப்பணித்திருப்பேன்."

                     இதற்கு ஸ்ரீ இராமர் அளித்த பதில்: தர்ம சாஸ்திரங்களின்படி, ஒரு மன்னன் தனது எதிரியை வெற்றிகொள்ள நட்புடைய மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி, உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு உறுதியளித்தேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால், அந்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளேன். நீ தர்மத்தின் விதிகளை மீறியவன். மேலும், நீ எனது நண்பனான சுக்ரீவனின் எதிரி என்பதால், எனக்கும் நீ எதிரியே."
            ஸ்ரீ இராமர் முதலில் சந்தித்தது சுக்ரீவனைத்தான், அப்போதே வாலியைக் கொல்வதாக உறுதிகொடுத்தார். எனவே, வாலியுடன் சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை. வாலி மன்னிக்கப்பட்டால், சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் சிக்கல் வந்திருக்கும். மேலும், வாலியே இராவணனை அடக்கி சீதையை அழைத்து வந்திருந்தால், இராவணனைக் கொல்வதற்காக தோன்றிய இராமரின் லீலைகள் பூரணமானதாக அமைந்திருக்காது. இராவணனைச் சார்ந்த மற்ற அசுரர்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி, ருமாவின் நிலை என்ன? எனவே, எப்படிப் பார்த்தாலும், வாலியின் பக்கம் எந்தவொரு நியாயமும் இல்லை, இராமரின் செயலில் எந்தவொரு அநியாயமும் இல்லை.

வாலியின் வருத்தமும் உன்னத இலக்கும்
               முதலில் ஸ்ரீ இராமரை எதிர்த்து கூக்குரலிட்ட வாலி, இராமரின் அறிவு நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னர், தனது மோசமான செயல்களை எண்ணி வெட்கப்பட்டான். மனிதரில் மாணிக்கமே, தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை, இதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் தவறிழைத்தவன், அறியாமையால் கடினமாகப் பேசிய என்னை மன்னித்து கருணையைப் பொழிய வேண்டுகிறேன்," என்று கூப்பிய கரங்களுடன் வாலி இராமரிடம் வேண்டினான்.  

பிறகு, பகவான் இராமர், நீ செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவித்துவிட்டாய். தற்போது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிட்டாய்," என்று வாலிக்கு உறுதியளித்தார். ஸ்ரீ இராமரின் வார்த்தைகளாலும் அம்பினாலும் புனிதமடைந்த வாலி மோக்ஷத்தையும் உன்னத இலக்கையும் அடைந்தான். இவையெல்லாம் வாலிமீது பகவான் இராமர் கொண்ட கருணையே.
                                          ஒரு வழக்கில் எதிரெதிர் தரப்பினர் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அங்கு வழக்கு என்பதே இல்லை. அதுபோல, பகவான் இராமர் தனது செயலின் நியாயத்தை வாலியிடம் தெளிவுபடுத்தினார், வாலியும் அதனை ஏற்றுக்கொண்டு இராமரிடம் சரணடைந்தான். வழக்கு முடிவுற்றது. இதன் பின்னரும் வாதம் செய்வதில் அர்த்தமில்லை. ஒருவேளை வழக்கு முடியவில்லை என்று வாலி நினைத்திருந்தால், சுக்ரீவனை மன்னராகும்படி கட்டளையிட்டிருக்க மாட்டான், சுக்ரீவனுக்கு தனது கழுத்திலிருந்த மணியை வழங்கியிருக்க மாட்டான், மேலும், வாலியின் மகனான அங்கதன் சுக்ரீவனுக்கு உறுதுணையாக செயல்பட்டிருக்க மாட்டான்.

எனவே, அறியாமையிலுள்ள மக்களே இராமரின் மீது குற்றம் சுமத்துவர் என்பதை இதிலிருந்து அறியலாம். வாலிக்கு கருணை வழங்கவும், கடக்கமுடியாத பிறப்பு, இறப்பு எனும் மாபெரும் சமுத்திரத்திலிருந்து அவனை விடுவிக்கவுமே இராமர் வாலியைக் கொன்றார். இதன் மூலமாக, பகவான் தனது லீலைகளின் பூரணமான தன்மையை வெளிப்படுத்துகிறார்ஶீஅவரது லீலைகள் அனைத்தும் நன்மைக்காகவே; அவர் ஒருவரை ஆசீர்வதித்து மற்றொருவரை வதம் செய்தாலும் இருவருமே உண்மையில் பலனடைகின்றனர். இதுவே இராம லீலைகளின் உன்னதத் தன்மை.

லீலைகளை யாரால் புரிந்துகொள்ள முடியும்?
                               இறைவனின் முன்பாக உடலை நீத்தல் மாபெரும் பாக்கியம்; பகவான் கிருஷ்ணரின் முன்பாக உடலை நீத்த பீஷ்மதேவரின் மாபெரும் அதிர்ஷ்டத்தை ஸ்ரீமத் பாகவதம் புகழ்கிறது. அதுபோலவே, பகவான் இராமரால் வதம் செய்யப்பட்டு, அவரிடம் மன்னிப்பை வேண்டிய பின்னர், இராமரைப் பார்த்தபடியே மரணமடைந்த வாலி, தனது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலையடைந்தான். பகவானின் இராஜ்ஜியத்திற்குத் திரும்பிச் செல்லுதல் என்பது மாபெரும் பாக்கியமன்றோ! பகவானிடமிருந்து தான் பெற்ற பாக்கியத்தை ஒரு வானரத்தால்கூட உணர முடிந்தது. ஆனால் நவீன கால மக்களோ பௌதிக நீதியையும் தர்க்கத்தையும் வைத்து இராமரைக் கேள்வி கேட்கின்றனர். என்னே விந்தை!

அத: ஸ்ரீ-கிருஷ்ண-நாமாதி ந பவேத் கிராஹ்யம் இந்த்ரியை
சேவோன்முகே ஹி ஜிஹ்வாதவ் ஸ்வயம் ஏவ ஸ்புரத் யத:

            பௌதிகமாக களங்கமடைந்த புலன்களின் மூலமாக பகவானின் உன்னதமான நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. பகவானின் தொண்டில் ஒருவர் ஈடுபடும்போது, அதனால் அவரிடம் திருப்தியடையும் பகவான், தானே முன்வந்து தன்னை வெளிப்படுத்துவார். அப்போது மட்டுமே அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்." (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.234) அதாவது, பகவானிடம் சரணடைந்து அவருக்கு சேவை செய்யாத வரை, அவரது லீலைகளின் உன்னதமான தன்மைகள் மர்மமாகவே இருக்கும். பகவான் எதையும் செய்ய வல்லவர், அவரது செயல்களை அதிகாரபூர்வமான பக்தர்களிடமிருந்து கேட்டால் மட்டுமே உணர முடியும், சவாலான கேள்விகளாலோ பௌதிகமான தர்க்கத்தினாலோ அறநெறிகளாலோ இயலாது.

கேள்வி எழுப்புவோரின் நிலை
                           இராமரைப் பற்றி சவால் விடுவதற்கு முன்பாக சற்று சிந்திக்க வேண்டும். அவர் குற்றவாளி என்றால், ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் அவரை வழிபட்டது ஏன்? பிரம்மாண்டமான கோவில்களை எழுப்பி அவரது புகழையும் போதனைகளையும் பரப்பியது ஏன்? அவர்கள் அனைவரும் மூடர்களா?"
நிச்சயமாக இல்லை.
அவர்கள் இராமாயணத்தை முழு நம்பிக்கையுடன் படித்தனர், முறையாகக் கேட்டனர், ஒழுங்காகப் புரிந்து கொண்டனர், இராமரை இதயப்பூர்வமாக வழிபட்டனர். ஆனால் இன்றைய மக்களோ, மாமிசம், மது, மாது, சூது போன்ற எல்லாவித பாவச் செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, சாஸ்திரங்களைப் படிப்பதில்லை, பக்தர்களிடமிருந்து கேட்பதில்லை, கோவிலுக்குச் செல்வதில்லை, எந்தவொரு புண்ணியத்தையும் செய்வதில்லை. ஆயினும், பகவான் இராமரிடத்தில் திறமையாக குறை காண்கின்றனர். என்ன ஒரு மூடத்தனம்! மேலும், அவர்கள் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இழிவாகப் பேசுகின்றனர். நமது முன்னோர்கள், இராமாயணம், மஹாபாரதம் போன்ற கற்பனை" கதைகளைக் கேட்டு நேரத்தை வீணடித்தார்கள் என்றும், அவர்களைக் காட்டிலும் தாங்கள் புத்திசாலிகள் என்றும் நினைக்கின்றனர். கற்றறிந்த பண்டிதர்களைக் காட்டிலும் உண்மையான அர்த்தங்களை" தாங்கள் கிரகிப்பதாகவும், தங்களின் தர்க்கங்கள் வேதகால ரிஷிகளைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் எண்ணுகின்றனர். இவர்கள் இராமாயணம், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற எந்த சாஸ்திரத்தையும் படித்ததில்லை; ஆனால் எல்லா வேதங்களையும் தொகுத்த வியாஸதேவரைவிட அதிகம் அறிந்தவராக தம்மை எண்ணிக் கொள்கின்றனர்.

                           பகவான் இராமரை வழிபட மாபெரும் கோவில்களை எழுப்பிய சேரர், சோழர், பாண்டியர், மற்றும் இதர மன்னர்களெல்லாம் அறிவற்றவர்களா? பகவான் இராமரைப் புகழ்ந்து அவரை வழிபட்டவர்களான சங்கராசாரியர், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர் போன்ற ஆச்சாரியர்கள் குற்றம் செய்தவர்களா? பிரம்மதேவரும் சிவபெருமானும்கூட தவறானவர்களோ! அவர்களும் இராமரை வழிபட்டு அவரது திருநாமத்தை உச்சரிக்கின்றனரே. நவீன நாகரிகத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் மூடர்களை மட்டுமே இன்றைய மக்கள் பெருமையாக நினைக்கின்றனர்.

சற்று யோசித்துப் பாருங்கள்!
                ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தையும் அறிவையும் மறுக்கலாமோ! உங்களின் எண்ணங்கள் தவறாகவும் முன்னோர்களின் எண்ணங்கள் சரியாகவும் இருக்கலாமே! சற்று நேர்மையாக இருந்து நடுநிலையுடன் உண்மையை ஏன் எதிர்கொள்ளக் கூடாது?
                நாம் ஏன் சாஸ்திரங்களை ஆராய்ந்து தீர்வு காணக் கூடாது? பகவானின் தெய்வீக வார்த்தைகளான வேதங்களிடம் ஏன் தஞ்சமடையக் கூடாது? ஏன் (அனைத்து இஸ்கான் கோவில்களிலும் கிடைக்கும்) வால்மீகி இராமாயணத்தைப் படிக்கக் கூடாது? ஏன் பகவான் இராமரிடத்தில் சரணடைந்து அவரின் அருளை வேண்டக் கூடாது? கிருஷ்ணர் மற்றும் இராமரின் திருநாமங்களை உச்சரித்து உன்னதமான ஆனந்தத்தை ஏன் அனுபவிக்கக் கூடாது? தூய்மையான, அமைதியான, மற்றும் அர்த்தமான வாழ்க்கையை ஏன் வாழக் கூடாது?
                                        பாரதத்தின் பண்பாடும் பாரம்பரியமும் மோசமானதாக இருப்பின், வெளிநாட்டைச் சேர்ந்த எத்தனையோ பேர் (இஸ்கானில் காண்பதுபோல) இதனை ஏன் பின்பற்ற வேண்டும்? மாயையில் மயங்கி இராமரிடம் சவால் விட்ட இராவணனைப் போல நாமும் மயங்கிவிடலாமா? இராவணனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இராமாயணத்தைப் படித்தோர் அறிவர், படிக்காதோர் முதல் வாய்ப்பிலேயே படிக்க வேண்டும்.

எம்பெருமானே, மிகச்சிறந்த தைரியம் கொண்டவரே, மக்களின் இறைவனான இராமரே, அம்பினால் துளைக்கப்பட்டபோது முறையாக சிந்திக்க இயலாமல், அறியாமல், தங்களைப் பற்றி பெரிதும் அவதூறாகப் பேசிவிட்டேன். என்னை தயவுசெய்து மன்னித்தருளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்," என்ற வாலியின் வார்த்தைகளை இராமர் குற்றவாளி" என்று நினைத்த மற்றவர்களும் உரைப்பார்கள் என்று நம்புகிறோம்.

Image by FlamingText.com

1 comments:

Gopalakrishnan Sundararaman said...

So far I have not read such an interesting article. Thanks for your detailed explantion. With Warm Regards and Thanks.

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog