காதல்: ஒரு வித்தியாசமான விளக்கம் - சத்குரு
'நான்கு அரியர்களை வைத்துஇருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணி நேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!' என்று அண்மையில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
'நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!' என்று சிரித்தேன். நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்துகொள்ளாத மாணவர்களைப் பார்த்து, 'காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும்? போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள். காதல் வந்தால் கவிதையும் தானே வரும்' என்பார்.
ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜூன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள்.
'நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்' என்றேன்.
குழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுபூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின் மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன? உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன? மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாசாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப்பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது.
எதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்துகொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே... தூக்கம்தான் வருகிறது.
இது எப்படி மாணவனின் தப்பாகும்? பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப்போகிறார்கள்? அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா? காதலை கெமிஸ்ட்ரி என்பவர் கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா? பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக் காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு?
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது.
ஆங்கிலத்தில் அழகாக 'Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது. நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். 'நான்' என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.
சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகி விடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மை விட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்.
கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம்.
புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டுவந்து வைத்தார். 'அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.
பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்...
'சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப்போகிறீர்கள். அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப்போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது.
எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மை யான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்... வேதனையில் அல்லாடுகிறீர்கள்!’
உண்மைதான். மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல... குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம்.
வாழ்க்கை என்றாலே காதல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் காதலோடு கவனியுங்கள். நமக்குள் போய், நம்மில் ஒரு பாகமாகவே மாறும் உணவைக் காதலோடு புசியுங்கள்.
காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல்கொள்ளலாம்.
காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்னை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல்கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?''
2 comments:
Nice one!
Thanks @ Latha
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments