பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களை தினமும் பயன்படுத்துபவரா?அப்படியெனில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த ரகசியங்களை களவாடிக் கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சட் கொஞ்சமாக திருடுவதாக அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. எனவே நண்பர்களின் போர்வையில் வலம் வரும் இந்த சமூக விரோதிகளிடம் இருந்து இளைய தலைமுறையினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நட்பு தேடி யாராவது விருப்பம் தெரிவித்தால் உடனடியாக அதை ஒத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் ஆய்வு
பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து நடத்தப்படும் இதுபோன்ற ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருப்பதாக இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. மைக்ரோசாஃப்ட் நடத்திய இந்த ஆய்வில் ஃபிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்துவருவதாக எச்சரித்துள்ளனர்.
12 மடங்கு அதிகம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற ஃபிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.
நட்பு அழைப்பா கவனம்
ஃபிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள்.
பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும்.
அதிகரிக்கும் மோசடி
சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஃபிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்து வந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது.
ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த ஃபிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புகைப்படங்கள் எச்சரிக்கை
இதேபோல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை இணைக்கும் பெண்களும் புகைப்படங்களை இணைக்கும் முன் யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனெனில் இந்த புகைப்படங்களை ஹேக் செய்து ஆபாச இணையதள பக்கங்களில் உலாவ விடும் கும்பலின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்ளும் முன் ஆராய்ந்து எஸ் சொல்ல வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
English summary
Do you really know all your Face book "friends"? Beware, if your answer is 'No', as researchers say you could be putting your private details at risk every time you say 'Yes' to an unknown friend request.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments