Pages

Subscribe:

Friday, June 7, 2013

BLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்

பெண்ணாய் பிறத்தற்க்கே மாதவம் செய்திடல் வேண்டும் எனக்காலகாலமாக ஜல்லியடித்து ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை கொடுமைப்படுத்தப்படும் இனம் பெண்ணினம்.
வாச்சாத்தி கொடுமைக்கு நிவாரணம் பெற எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது?
ஒவ்வொரு நொடியும் பெண்கள்.... உலகில் ஏதாவது ஒரு மூலையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அந்த துன்பக்கடலின் ஒரு துளிதான் மரியம்.
அந்த அனிச்ச மலருக்கு வயது 17.
பார்பதற்கு நம்ம சிம்ரன் மாதிரி இருக்கும், இவள் தான் இந்த படத்தின் கதாநாயகி(மரியம்).

துருக்கி தேசத்து மலைகிராமத்தில் ....
நெடிதுயர்ந்த மலையின் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும்...
சலனமில்லாத குளத்தின் கரையில்...
துவைத்துப்போட்ட துணி போல் கிடக்கிறாள் மரியம்.
படத்தை உற்று பாருங்கள்.
அந்த இளங்குருத்தின் குருதி தொடை வழியே வழிந்தோடி குளத்து நீரில் கலப்பதை காண முடியும்.
முதல் காட்சி....முதல் ஷாட்டிலேயே இத்துன்பத்தை...துயரத்தை காட்டிய விதத்திலேயே 'நான் ஒரு உலகசினிமா வித்தகன்' என்பதை சொல்லி விட்டார் இயக்குனர் Abdullah Oguz.

நடந்த கொடுமைக்கு நிவாரணம் தேடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் ரணமாக்குவதானே நமது குல வழக்கம்.
தாயில்லாத மரியத்துக்கு பேயாக சித்தி.
கற்பழிக்கப்பட்ட பெண்ணை அழிப்பதுதான்....எங்குமே சாத்திரம்...சம்பிரதாயம். “தொங்கு”என கயிரை பரிசளிக்கிறாள் சித்தி.
உடலும்,மனமும் ரணமாகிப்போன மரியத்துக்கு ஆதரவு அன்றும்...இன்றும்...என்றும் ஒரே ஒரு பாட்டிதான்.
அவரிடம் கூட தன்னைக்குலைத்த மாபாதகனை காட்டிக்கொடுக்க மறுக்கிறாள் மரியம்.
மரியத்தை ஒழிப்பது எப்படி என்று ஊரே ஒன்று கூடி பேசுகிறது.
முடிவாக ஒரு ராணுவ வீரனிடம் பணியை ஒப்படைக்கிறார்கள்.
கொலைக்களனாக இஸ்தான்புல் நகரத்தை தேர்ந்தெடுத்து மரியத்தை பலியாடாக அழைத்துச்செல்கிறான்.
புண் பட்ட மரியத்தின் மனதுக்கு ஒவியம் போல் காட்சியளிக்கிறது இஸ்தான்புல் நகரம்.
நகரம் மறைந்திருக்கும் நரகம் என்பதறியா பேதை.
ராணுவத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக பணிபுரிந்தவனுக்கு போட்டுத்தள்ள சரியான இடம் சொல்லியா தர வேண்டும்?

துடிக்கும் துப்பாக்கியால் மரியத்தின் உயிரை குடிக்க முடியாமல் தவிக்கிறான்.
காரணம்....சிறு வயது முதல் அவனால் நேசிக்கப்பட்டவள் மரியம்.
தன்னை நேசித்தவன்... யாசிப்பது உயிர்... என்பதறிந்து  “எடுக்கவேண்டாம்....கொடுக்கிறேன்”என தற்கொலைக்கு துணிகிறாள்.
 “தூயவனே! செல்...என் தந்தையிடம் சொல்...
மரியம் மாசற்றவள்.....சொர்க்கத்தில் என் தாயை சந்திக்க செல்கிறேன்” என மரணத்தை நோக்கி மரியம் பாய்கையில் தடுத்து விடுகிறான் மாவீரன்.
பல்லாயிரம் உயிரைக்குடிக்கும் அணு உலையை திறக்கத்துடிக்கும் மத்திய அரசா அவன்?
மனிதநேயம் மிகுந்த மனிதன்.

இக்காட்சியை நூறு முறை பார்க்க வேண்டும் நமது படைப்பாளிகள்.
நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை ...இவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒரு காட்சியை எப்படி வீர்யமாக்குகின்றன என்பதற்க்கு இலக்கணம் இக்காட்சி.
இது போன்ற படங்களை நேசித்து பார்க்கும் படைப்பாளிகளிடம் வேலாயுதமும் ஏழாம் அறிவும் தோன்றாது.

வாழ நினைத்தால் வாழலாம்....
வழியா இல்லை பூமியில்.... என புறப்பட்ட ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஒரு பேராசிரியர்.
அலை கடலில் ஒரு தோணி...
அதில் வாழ்வதே என் பாணி....
என உல்லாசப்படகில் உலகம் சுற்றும் வாலிபன் அவர்.
 
அவரது தாடி மட்டும் வெள்ளையில்லை.. மனமும்.. என எண்ணுகிறாள் மரியம். 
அவர்,  பாலா....பாலிடாலா....என சந்தேகிக்கிறான் மாவீரன்.

மரியத்தை கெடுத்த மாபாவி யார்? என்ற முதல் கேள்வியிலிருந்து....
பேராசிரியர் நல்லவரா?கெட்டவரா?
மரியத்தை மாவீரன் ஏற்றானா?மறுத்தானா?
மரியம் வாழ்வாளா?வீழ்வாளா?
துப்பாக்கி வெடிக்குமா?வெடிக்காதா?
[மரியத்தின் உயிரைக்குடிக்க நினைத்த துப்பாக்கி... இன்னொரு காட்சியில் குளோசப்பில் காட்டப்படுகிறது.
துப்பாக்கிக்கு குளோசப் ஷாட் போட்டால் அது வெடிக்க வேண்டும் என்பது மாமேதை ஹிட்ச்ஹாக் கடைப்பிடித்த கோல்டன் ரூல்.]
என பல துணை கேள்விகளோடு படம் பயணிக்கிறது.





Thanks to :http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog