Pages

Subscribe:

Thursday, September 8, 2011

World Film: Maria Full of Grace (2004)

நகரத்திலிருந்து நீங்கி, இயற்கை அழகு நிறைந்த மலைப்பதையூடகச் சென்று கொண்டிருக்கிறது அந்தப் பேருந்து! அதிகாலை நேரம் தூக்கக் கலக்கத்துடன் பயணிகள். வெறுமையும், மென்சோகமும் படர்ந்த முகத்துடன் ஒரு அழகிய இளம் பெண் - அவள் பெயர் மரியா!

ரோஜாத் தோட்டத்திலிருந்து பூக்களைப் பறித்து, சீராக வெட்டி பூங்கொத்து தயாரிப்பதுதான் வேலை. மரியாவுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. வயதான தாய், பாட்டி, கணவனின்றிக் கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரி என குடும்ப சூழ்நிலை காரணமாக வேறுவழியின்றி தொடர்கிறாள். அவளுடன் வேலை பார்க்கும் நெருங்கிய தோழி பிளாங்கா. ஒருநாள் சூப்பவைசருடன் தர்க்கம் காரணமாக வேலையை உதறிவிட்டு வருகிறாள் மரியா. வீட்டில் அம்மா சொல்கிறாள் மன்னிப்புக்கேட்டு மறுபடியும் வேலைக்கு சேர்ந்துவிடு என்று. மரியா மறுத்து தாய், சகோதரியுடன் சண்டையிடுகிறாள். அன்று இரவு நைட்கிளப்பில் தனது காதலன் , பிளாங்கா ஆகியோருடன் பொழுதைக்கழிக்கும் மரியாவிற்கு அங்கே பிராங்க்ளின் அறிமுகமாகிறான்.


மரியாவுக்குத் தான் கர்ப்பமாயிருப்பது தெரியவர, காதலனிடம் விஷயத்தைச் சொல்கிறாள். அவன் திருமணம் செய்துகொள்வதைப் பற்றிப் பேச, மரியா தன்னால் அவனது சிறிய வீட்டில் வந்து வாழ முடியாதெனவும்,  அவனைத் தன வீட்டில் வந்து தங்குமாறும் கூற, அது எப்படி பெண்வீட்டில் வந்து தான் தங்குவது என அவன் மறுக்க, முடிவில் தகராறு முற்றி, சரியான புரிந்துணர்வற்ற அவர்களின் டீன் ஏஜ் காதல் முடிவுக்கு வருகிறது!


இப்போது மரியா பெரும் சிக்கலில்! தனது குடும்பம், வயிற்றில் வளரும் சிசு எல்லாரையும் கவனிக்கவேண்டிய சூழ்நிலை! இந்நிலையில் மீண்டும் பிராங்க்ளினைச் சந்திக்க, அவளது உடனடித்தேவை நல்ல வருமானமுள்ள வேலை என உணரும் அவன் ஒரு வேலையைப் பரிந்துரைக்கிறான். அது, நியூயோர்க்கிற்கு போதைமருந்து கடத்திச் செல்லுதல்!


தன்னம்பிக்கையும், துணிச்சலும் கொண்ட மரியா வேறொரு வழியும் இல்லாததால் ஒத்துக்கொள்கிறாள். பிராங்க்ளின் அறிமுகப்படுத்தும் டீலரான பெரியவர், வேலை, நடைமுறை சிக்கல்கள் எல்லாமே அவளுக்கு விளக்கி உன்னால் முடியுமா? எனக் கேட்கிறார். அங்கே இன்னொரு அழகான பெண் லூசியைப் பார்க்கிறாள். பின்பு தற்செயலாக மீண்டும் லூசியை வீதியில் சந்திக்கும் மரியா, அவளுடன் பேச முயல, முதலில் மறுக்கும் அவள் தனது வீட்டிற்கு மரியாவை அழைத்துச் செல்கிறாள்.


எதுவும் பேசாமல் ஒரு பாத்திரத்தில் பெரிய திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்து மரியாவிடம் தருகிறாள். ஒரு பழத்தை எடுத்து அது உடைந்துவிடாமல், சிதையாமல் அப்படியே விழுங்குமாறு கூறுகிறாள். மரியா முயற்சிக்கிறாள்..முடியவில்லை! ஒரு திராட்சையை எடுத்து இலகுவாக விழுங்கும் லூசி, இதே அளவில் குறைந்தது  நாற்பது காப்சியூல்களை விழுங்கவேண்டும் என்கிறாள்.


பயணம் செய்யும் நாளில் உணவு எதுவும் அருந்தக் கூடாது, ஏனெனில் இயற்கையின் உபாதை காரணமாக வெளியேறி ஒன்று குறைந்தாலும், கொன்றுவிடுவார்கள்! லூசி தன் அக்கா கர்லா நியூயார்க்கில் இருப்பதாகவும், சிறுவயதில் பார்த்தது தான் இப்போதுள்ள நிலையில், தொழிலில் அவளைச் சந்திக்க விரும்பவில்லை என்றும் கூறுகிறாள்.


குறிப்பிட்ட அந்தநாளில் விமானத்தில் மரியா, பிளாங்கா, லூசி அனைவரும் பயணமாகிறார்கள்.பின்பு என்னவாகிறது?தனது கிராமத்தைவிட்டு பக்கத்திலிருக்கும் நகரத்திற்குக் கூட தனியாக சென்றிராத மரியா விமான நிலையத்தில், நியூயார்க்கில் சந்திக்கும் அனுபவங்கள் என்னென்ன?


அறிமுகமில்லாத மரியாவுக்கும், பிளாங்காவுக்கும் உதவி செய்யும் கர்லாவும் அவள் கணவன், அவர்கள் பற்றிய உண்மை தெரிந்தும் காட்டிக்கொடுக்காத நல்லவரான வேலைவாய்ப்பு முகவரான பெர்னான்டோ, விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரிகள் என ஒவ்வொரு சிறிய பாத்திரங்களும் கவர்கிறார்கள்!


விமான நிலையத்தில் போதை மருந்து சந்தேகத்தில் யூரின் டெஸ்ட் செய்ய, வயிற்றில் குழந்தை இருப்பதால் அதன் காரணமாக எக்ஸ்-ரே டெஸ்டிலிருந்து தப்பிக்கிறாள் மரியா!
காப்சியூல்களை விழுங்கியதால் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்றஞ்சி நியூயார்க்கில் 'ஸ்கான்' செய்து பார்க்கிறாள். குழ்காந்தையின் அசைவுகளை பார்க்கும் பொது மரியாவின் முகபாவனைகள் மிக அழகான கவிதை!
விமானத்தில் மரியா எதிர்கொள்ளும் அனுபவம்! நினைத்தே பார்க்கமுடியாத அதிர்ச்சி!


லூசிக்கு நேரும் முடிவு! அதை கர்லாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் மரியா, உண்மை தெரிந்ததும் கர்லாவின் கோபம், பின்பு புரிந்து கொண்டு அமைதியாகும் கர்லாவின் நடிப்பு!


சொந்த நாட்டைவிட்டு, வருமானத்திற்காக அந்நிய நாட்டில் வாழ நேர்ந்துவிட, சொந்த மண்ணின் நினைவுகள் ஏக்கங்களை கலங்கும் கண்களுடன் விவரிக்கும் கர்லாவின் வார்த்தைகள் நம் எத்தனையோ பேரின் உணர்வுகளாக!


விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் மரியாவிடம் அவளிடம் உனக்கு நியூயார்க்கிற்கு விமான டிக்கட் எடுக்க ஏது பணம், யார் பணம் தந்தது? அது மட்டுமே தங்களின் சந்தேகத்திற்கான காரணம் எனக்கூறுவது ஒன்றே, அவள் வாழும் பிரதேசத்தின் தன்மையைப் பிரதிபலிக்கிறது!


மரியா போதை மருந்து விழுங்கும் காட்சி, சுகவீனமையும் லூசிக்கு மருத்துவ உதவி செய்யாமல் அவளின் வயிற்றைக் கிழித்து காப்சியூல்களை எடுப்பது - இதை நேரடியாகக் காட்டாமல் உணரவைப்பது மனம் பதறச் செய்யும்!


- ஆனால் இதே போன்ற காட்சியை 'அயன்' படத்தில் கொடூரமாக விலாவாரியாகக் காட்டி, அதிர்ச்சியைவிட அருவருப்பை அதிகமாக ஏற்படுத்தியிருப்பார்கள்!
 
2004 இல் வெளியான இப்படத்தில் மரியாவாக நடித்த Catalina வுக்கு சிறந்த நடிகைக்கான Berlin Film Festival விருது கிடைத்தது. சிறந்த நடிகைக்கான Academy Award விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.


இயக்கம் : Joshua Marston
மொழி : Spanish
நாடு : Colombia


Image by FlamingText.com


0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog