Pages

Subscribe:

Friday, July 20, 2012

ஆல மரம் ஒரு இந்திய அதிசயம்

அலெக்ஸண்டரை வியப்பில் ஆழ்த்திய மரம்
உபநிஷத ரிஷிகள், மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி கொடுக்க பயன்படுத்திய மரம் இந்தியாவின் தேசிய மரம் தமிழ், சம்ஸ்கிருத கவிஞர்கள் பாடிய மரம் சால்மான் ருஷ்டி, சதே, டேனியல் டீபோ கதைகளில் வரும் மரம்
அங்கோர் வட் கோவிலுக்கு பெயர் கொடுத்த மரம் பனியா என்ற சொல்லை ஆங்கில அகராதியில் நுழைத்த மரம் பகவத் கீதையில் கண்ணன் சொன்ன மரம்
சிவன் உபதேசம் செய்த மரம் கண்ணன் இலையில் மிதந்த மரம்
கின்னஸ் நூலில் புகழ் அடைந்த மரம் அமெரிக்கா வரை சென்ற மரம்
வட சாவித்திரி விரதத்தில் வணங்கப்படும் மரம் தமிழ் பழமொழிகளில் இடம்பெற்ற மரம் தமிழ் நாட்டுக் கோவில்கள் ஆறில் தல விருட்சம் ஆன மரம்

உலகம் புகழும் இந்த இந்திய அதிசயம் உபநிஷத ரிஷிகள காலம் முதல் இன்று திரைப் படப் பாடல்கள் வரை மனிதனின் சிந்த்னையைத் தூண்டி வருகிறது. ஆல் போல் தழைத்து அருகு போல வேரூன்ற வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவதைக் கேட்கிறோம்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று ஆலமரமும் வேல மரமும் புகழப்படுகின்றன. (நாலும் இரண்டும்=வெண்பா, குறள் பாக்கள் வகை).
தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் பல ஊர்ப்பெயர்களிலும் (வடோதரா, குஜராத்) ஆல மரம் மணம் கமழும். தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் இது ஸ்தல விருட்சம் (மரம்) ஆக திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திரு வில்லிப் புத்தூர்.

அங்கோர்வட் என்னும் கம்போடிய நாட்டு ஆலயம் உலக அதிசயங்களில் ஒன்று. அதன் பெயரில் உள்ள வட் என்பது “வட” என்ற சம்ஸ்கிருத சொல்லின் சுருக்கம் ஆகும். “வட” என்றால் ஆல மரம் என்பது பொருள்.
ஆண்டுதோறும் கோடைகால (ஆடி) பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது.
பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு சர்மன் இந்த மரத்தை வானளாவப் புகழ்கிறான். மற்ற மரங்கள் பூமிக்குப் பாரமே என்பான். பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் வாழ்வளிக்கும், மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் இந்த மரம் மகிழ்ச்சிக் கடலின் இருப்பிடம் என்பான்.

எப்படி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல கட்டிடங்களுக்கு அடியில் வேரை நுழைத்து ஆலமரம் அந்தக் கட்டிடங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைக்கிறதோ அது போல மன்னன் அஜன் மனதில் கவலைகள் நுழைந்தன என்று கவிபாடுவான் உலகப் புகழ் காளிதாசன்.
ஆலின் கீழ் அமர்ந்து பேசா மூர்த்தியாக சிவ பெருமான், தட்சிணாமுர்த்தி வடிவில், மவுன உபதேசம் செய்த மரம். கண்ணன் ஆலின் இலையில் மிதந்து பெருமை ஏற்றிய மரமும் இதுதான். ஆதிகாலத்தில் கோவில்கள் அனைத்தும் மரத்தின் கீழ்தான் இருந்தன. குறிப்பாக ஆலமரத்தின் கீழ் கோவில் கட்டினர். ஊர் மன்றம் நடத்தினர். விழாக்கள் நடத்தினர்.

அலெக்ஸாண்டர் இந்த மரத்தைக் கண்டு வியந்ததையும் 7000 படை வீரர்களுடன் முகாம் இட்டதையும் கிரேக்க நாட்டு ஆசிரியர்கள நமக்கு எழுதிவைத்திருக்கிறார்கள்.

சாந்தோக்கிய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்ற இளைஞனுக்கு அவன் தந்தை பல விஞ்ஞான சோதனைகள் மூலம் இறை ஞானம் அளிக்கிறார். அதில் ஒரு செய்முறைப் பயிற்சி ஆல மரம் தொடர்புடையது.

“ மகனே அதோ அந்த ஆல மரத்திலிருந்து ஒரு பழம் பறித்து வா.
“இதோ, கொண்டுவந்துவிட்டேன், தந்தையே
“மகனே அதைப் பிரித்து உள்ளே பார்,
தந்தையே, மிக மிகச் சிறிய விதைகள் இருக்கின்றன
மகனே அதில் ஒருவிதையை எடுத்து பிரித்துப் பார்.
தந்தையே, பிரித்துவிட்டேன்.ஒன்றுமே தெரியவில்லையே.
பார்த்தாயா, ஒன்றுமே கண்ணுக்குக் தெரியாத அந்த ஒன்றிலிருந்துதான் இந்த பிரம்மாண்டமான ஆலமரம் உருவாகி இருக்கிறது. அதுதான் பிரம்மம். அது வேறு யாரும் இல்லை. நீயேதான்.(உன்னையே நீ அறிவாய்).
ஆலமரக்குச்சிகள் பல் தேய்க்க உதவும். அதன் பட்டைகளும், பாலும் பழமும் மருதுவப் பயன் கொண்டவை.

அஸ்வத்தாமவுக்கு பாண்டவர்களைப் படுகொலை செய்யும் யோசனை தோன்றியதும் ஆல மரத்துகடியில்தான். இரவு நேரத்தில் காகங்கள் ஆந்தைகளைத் தாக்கியதைப் பார்த்தவுடன் அதே போல இரவு நேரத்தில் பாண்டவர்கள் முகாமுக்குள் சென்று படுகொலைகள் செய்கிறான்.

அதே ஆலமரத்தை மும்மூர்த்திகளின் வடிவாக இந்துக்கள் வணங்குவர். பிரம்ம, விஷ்ணு, சிவன் அந்த மரத்தின் வேர், பட்டை, கிளைகளில் இருப்பதாக ஐதீகம்.

பனியா என்ற சொல்லும், பானியன் ட்ரீ என்ற சொல்லும் ஆங்கில அகராதியில் உண்டு. அந்தக் காலத்தில் வியாபாரிகள் (பனியாக்கள்) இம்மரத்தின் கீழ் இருந்து வணிகம் செய்ததை வைத்து மரத்துக்கு பானியன் ட்ரீBanyan Tree என்ற ஆங்கிலப் பெயர் வந்தது.

தாவர இயல் ரீதியில் அரச மரம் (அஸ்வத்த), அத்தி மரம், ஆல மரம், உடும்பரா ஆகியன மோரேஸி Moraceae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தன. இவை அனைத்தும் பைகஸ் Ficus என்னும் பெயருடன் துவங்கும். இந்துக்கள் இதை அந்தக் காலத்திலேயெ அறிவர். இவை அனைத்திலும் இறைவன் உறைவதை அறிந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட ஏற்றிவிட்டனர்.(ந்யக்ரோத=ஆலமரம், அஸ்வத்த=அரச மரம், உடும்பர= அத்தி வகை, யமனுக்குரிய மரம், எமனின் மற்றொரு பெயர் அவுதும்பரன்)

உலகப் புகழ்பெற்ற ஆல மரங்கள்

வெளிநாட்டினர் இந்தமரங்களை அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய இடங்களில் நட்டு அவை மிகவும் பெரிதாக வளர்ந்துவிட்டன. அமெரிக்காவில் ஹவாய் திவிலும், ப்ளோரிடா மநிலத்திலும் ஆல மரங்கள் உண்டு.

ஆயினும் சென்னை அடையாறு பிரம்ம ஞான சபை வளாக ஆலமரம், ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம், உலகப் புகழ் கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம், குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்-- நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளருகின்றன. ஒரே நேரத்தில் 3000 முதல் 10000 பேர் வரை இவைகளின் கீழ் நிழலில் தங்கி இளைப்பாறலாம். இந்த மரங்களை அழியாமல் காப்பதும் போற்றி வளர்ப்பதும் நம் கடமை.

பஞ்சாபில் கட்டி சோலன் கிராமத்தில் இருக்கும் மாபெரும் ஆலமரத்தின் குச்சிகளை அடுப்பெரிக்க விறகுக்காக கூட மக்கள் எடுக்கமாட்டார்கள். அதனால் குடும்பத்துக்கே ஆபத்துவரும் என்று பயப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான பறவைகளை ஆனந்தப் படுத்துமால மரத்தை துன்புறுத்த யாருக்கு மனம் வரும்?


“தெள்ளிய ஆலின் சிறுபழத் தொரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னக் கிருக்க நிழலாகும்மே” --(வெற்றிவேர்க்கை)

பொருள்: சிறிய மீனின் முட்டையை விடச் சிறியதான ஆல மர விதையானது நாற்பெரும் படையொடு வரும் மன்னரும் தங்க நிழல் தரும். அதுபோல மிகச் சிறிய செல்வமுடைய மேன் மக்கள் பிறருக்குப் பெரிதும் பயன்பட வாழ்வார்கள்..

அத்தி, ஆல் அரசு ஆகிய மரங்கள் எல்லாவற்றிலும் பூக்கள் வெளியே தெரியாமலே காய்கள் உருவாவதால் பூவாது காக்கும் மரங்கள் (கோளி ஆலம்) என்று சொல்லி இவைகளையும் உவமைக்குப் பயன்படுத்தினர் தமிழ் புலவர்கள்.

நாலடியார் என்னும் அற நூல் பல இடங்களில் ஆல மர உதாரணத்தைக் காட்டுகிறது. ஆலம் விதை சிறிதானாலும் மரம் பெரிதாவது போல ஒருவனின் அறச் செயல் பயன் தரும். இன்னும் ஒரு இடத்தில் ஆலமரத்தைக் கறையான்கள் அரித்தாலும் அதன் விழுதுகள் அதைத் தாங்கி நிற்பது போல தந்தையை மகன் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும்.
மரம் வளர்த்தால், மனித குலம் தழைக்கும்.


Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog